Daily Readings

Mass Readings for
17 - Nov- 2025
Monday, November 17, 2025
Liturgical Year C, Cycle I
(Monday of the Thirty‑third week in Ordinary Time)

Saint Elizabeth of Hungary, religious - Memorial

திருப்பலி வாசகங்கள்
முதல் வாசகம்: First Maccabees 1:10-15, 41-43, 54-57, 62-63
பதிலுரைப் பாடல்: திருப்பாடல்கள் 119:53, 61, 134, 150, 155, 158
நற்செய்தி வாசகம்: லூக்கா 18:35-43

செபமாலை: மகிழ்வின் மறையுண்மைகள்


பொதுக்காலம் 33ஆம் வாரம் – திங்கள்

First Reading: 1 மக்கபேயர் 1:10-15, 41-43, 54-57, 62-63
Responsorial Psalm: திருப்பாடல்கள் 119:53, 61, 134, 150, 155, 158
Gospel: லூக்கா 18:35-43

First Reading
1 மக்கபேயர் 1:10-15, 41-43, 54-57, 62-63
இஸ்ரயேல் மீது பேரிடர் வந்துற்றது.

மக்கபேயர் முதல் நூலிலிருந்து வாசகம் 1: 10-15, 41-43, 54-57, 62-63

மன்னர் அந்தியோக்கின் மகன் அந்தியோக்கு எப்பிபான் ஆவான்; முன்பு உரோமையில் பிணைக் கைதியாக இருந்த அவன் கிரேக்கப் பேரரசின் நூற்று முப்பத்தேழாம் ஆண்டு ஆட்சி செய்யத் தொடங்கினான்.

அக்காலத்தில் இஸ்ரயேலில் தீநெறியாளர் சிலர் தோன்றி, “வாருங்கள், நம்மைச் சுற்றிலும் இருக்கும் வேற்றினத்தாரோடு நாம் உடன்படிக்கை செய்து கொள்வோம்; ஏனெனில் நாம் அவர்களை விட்டுப் பிரிந்ததிலிருந்து நமக்குப் பலவகைக் கேடுகள் நேர்ந்துள்ளன” என்று கூறி, மக்கள் அனைவரையும் தவறான வழியில் செல்லத் தூண்டினர். இது அவர்களுக்கு ஏற்புடையதாய் இருந்தது. உடனே மக்களுள் சிலர் ஆர்வத்தோடு மன்னனிடம் சென்றனர். அவர்கள் கேட்டதற்கு இணங்க, வேற்றினத்தாரின் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதற்கு அவன் அவர்களுக்கு உரிமை அளித்தான். வேற்றினத்தாருடைய பழக்க வழக்கத்திற்கு ஏற்ப அவர்கள் எருசலேமில் உடற்பயிற்சிக் கூடம் ஒன்று ஏற்படுத்தினார்கள்; விருத்தசேதனத்தின் அடையாளத்தை மறைத்து, தூய உடன்படிக்கையை விட்டுவிட்டு, வேற்றினத்தாரோடு கலந்து, எல்லா வகைத் தீமைகளையும் செய்தார்கள்.

எல்லாரும் ஒரே மக்களினமாய் இருக்க வேண்டும் என்றும், தனிப்பட்ட பழக்க வழக்கங்களைக் கைவிட வேண்டும் என்றும் அந்தியோக்கு மன்னன் தன் பேரரசு முழுவதிலும் ஆணை பிறப்பித்தான். மன்னனின் கட்டளைப்படி நடக்கப் பிற இனத்தார் அனைவரும் இசைந்தனர். இஸ்ரயேலருள் பலர் மன்னனுடைய வழிபாட்டு முறைகளை மனமுவந்து ஏற்றுக் கொண்டனர்; சிலைகளுக்குப் பலியிட்டனர்; ஓய்வு நாளைத் தீட்டுப்படுத்தினர்.

நூற்று நாற்பத்தைந்தாம் ஆண்டு கிஸ்லேவு மாதம் பதினைந்தாம் நாள் அந்தியோக்கும் அவனுடைய ஆள்களும் பலிபீடத்தின் மேல் நடுங்க வைக்கும் தீட்டை நிறுவினார்கள்; யூதேயாவின் நகரங்களெங்கும் சிலை வழிபாட்டுக்கான பீடங்களைக் கட்டினார்கள்; வீட்டுக் கதவுகளுக்கு முன்பும் வீதிகளிலும் தூபம் காட்டினார்கள்; தங்கள் கண்ணில் பட்ட திருச்சட்ட நூல் ஒவ்வொன்றையும் கிழித்து நெருப்பிலிட்டு எரித்தார்கள். எவரிடம் உடன்படிக்கை நூல் காணப்பட்டதோ, யார் திருச்சட்டத்தின்படி நடந்துவந்தார்களோ அவர்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டும் என்பது மன்னனது கட்டளை.

எனினும் இஸ்ரயேலருள் பலர் உறுதியாய் இருந்தனர்; தூய்மையற்ற உணவுப் பொருள்களை உண்பதில்லை என்று தங்களுக்குள் முடிவு செய்து கொண்டனர்; உணவுப் பொருள்களால் தங்களைத் தீட்டுப்படுத்திக் கொள்வதை விட, தூய உடன்படிக்கையை மாசுபடுத்துவதை விடச் சாவதே சிறந்தது என்று கருதினர்; அவ்வாறே இறந்தனர். இவ்வாறு இஸ்ரயேல் மீது பேரிடர் வந்துற்றது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

Responsorial Psalm
திருப்பாடல்கள் 119:53, 61, 134, 150, 155, 158
பல்லவி: ஆண்டவரே, உமது ஒழுங்கு முறைகளை நான் கடைப்பிடிப்பேன்.

53 உம் திருச்சட்டத்தைக் கைவிடும் தீயோரைப் பார்க்கும்போது சீற்றம் என்னைக் கவ்விக்கொள்கின்றது.
61 தீயோரின் கட்டுகள் என்னை இறுக்குகின்றன; ஆயினும், உம் திருச்சட்டத்தை நான் மறவேன்.
பல்லவி: ஆண்டவரே, உமது ஒழுங்கு முறைகளை நான் கடைப்பிடிப்பேன்.

134 மனிதர் செய்யும் கொடுமையினின்று என்னை விடுவியும்! உம் நியமங்களை நான் கடைப்பிடிப்பேன்.
150 சதிசெய்து ஒடுக்குவோர் என்னை நெருங்கி வருகின்றனர்; உம் திருச்சட்டத்துக்கும் அவர்களுக்கும் வெகு தொலைவு.
பல்லவி: ஆண்டவரே, உமது ஒழுங்கு முறைகளை நான் கடைப்பிடிப்பேன்.

155 தீயோர்க்கு மீட்பு வெகுதொலையில் உள்ளது; ஏனெனில், அவர்கள் உம் விதிமுறைகளைத் தேடுவதில்லை.
158 துரோகம் செய்வோரை அருவருப்புடன் பார்க்கின்றேன்; ஏனெனில், அவர்கள் உம் வாக்கைக் கடைப்பிடிப்பதில்லை.
பல்லவி: ஆண்டவரே, உமது ஒழுங்கு முறைகளை நான் கடைப்பிடிப்பேன்.

Gospel
லூக்கா 18:35-43
ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 35-43

அக்காலத்தில்

இயேசு எரிகோவை நெருங்கி வந்தபோது, பார்வையற்ற ஒருவர் வழியோரமாய் உட்கார்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார். மக்கள் கூட்டம் கடந்து போய்க்கொண்டிருந்ததைக் கவனித்த அவர், “இது என்ன?” என்று வினவினார். நாசரேத்து இயேசு போய்க்கொண்டிருக்கிறார் என்று அவருக்குத் தெரிவித்தார்கள்.

உடனே அவர், “இயேசுவே! தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று கூக்குரலிட்டார். முன்னே சென்றுகொண்டிருந்தவர்கள் அமைதியாய் இருக்குமாறு அவரை அதட்டினார்கள். ஆனால் அவர், “தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று இன்னும் உரக்கக் கத்தினார்.

இயேசு நின்று, அவரைத் தம்மிடம் கூட்டிக்கொண்டு வரும்படி ஆணையிட்டார்.

அவர் நெருங்கி வந்ததும், “நான் உமக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?” என்று இயேசு கேட்டார். அதற்கு அவர், “ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்” என்றார். இயேசு அவரிடம், “பார்வை பெறும்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று” என்றார்.

அவர் உடனே பார்வை பெற்று, கடவுளைப் போற்றிப் புகழ்ந்து கொண்டே இயேசுவைப் பின்பற்றினார். இதைக் கண்ட மக்கள் யாவரும் கடவுளைப் புகழ்ந்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.