1 ஆண்டவர் மனிதரை மண்ணால் படைத்தார்: மீண்டும் அந்த மண்ணுக்கே திரும்புமாறு செய்கிறார்.
2 அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலவரையை வகுத்தார்: மண்ணுலகில் உள்ளவற்றின்மீது அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.
3 தமக்கு உள்ளதைப்போன்ற வலிமையை அவர்களுக்கு வழங்கினார்: தமது சாயலாகவே அவர்களை உருவாக்கினார்.
4 எல்லா உயிரினங்களும் மனிதருக்கு அஞ்சும்படி செய்தார்: விலங்குகள், பறவைகள்மீது அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.
5 [தம் ஐந்தறிவைப் பயன்படுத்தும் உரிமையை ஆண்டவர் அவர்களுக்கு அளித்தார்: ஆறாவதாகத் தம் அறிவுத்திறனில் பங்கு கொடுத்தார்: அந்த ஆறறிவையும் விளக்கும் பகுத்தறிவை ஏழாவது கொடையாக வழங்கினார்.]
6 விருப்புரிமை, நாக்கு, கண், காது ஆகியவற்றையும் சிந்திப்பதற்கு ஓர் உள்ளத்தையும் அவர்களுக்குக் கொடுத்தார்.
7 அவர்களை அறிவாலும் கூர்மதியாலும் நிரப்பினார்: நன்மை தீமையையும் அவர்களுக்குக் காட்டினார்.
8 அவர்களின் உள்ளத்தைப்பற்றி விழிப்பாய் இருந்தார்: தம் செயல்களின் மேன்மையைக் காட்டினார்.
9 [தம் வியத்தகு செயல்கள் பற்றி என்றும் பெருமைப்படும் உரிமையை அவர்களுக்கு அளித்தார்.]
10 அவர்கள் அவரது திருப்பெயரைப் புகழ்வார்கள்: இவ்வாறு அவருடைய செயல்களின் மேன்மையைப் பறைசாற்றுவார்கள்.
11 அறிவை அவர்களுக்கு வழங்கினார்: வாழ்வு அளிக்கும் திருச்சட்டத்தை அவர்களுக்கு உரிமையாக்கினார்.
12 அவர்களுடன் முடிவில்லா உடன்படிக்கை செய்துகொண்டார்: தம் தீர்ப்புகளை அவர்களுக்கு வெளிப்படுத்தினார்.
13 அவர்களின் கண்கள் அவருடைய மாட்சியைக் கண்டன: அவர்களின் செவிகள் அவரது மாட்சியின் குரலைக் கேட்டன.
14 எல்லாவகைத் தீமைகள் குறித்தும் கவனமாய் இருங்கள் என்று அவர் எச்சரித்தார்: அடுத்திருப்பவர்களைப் பற்றிய கட்டளைகளை அவர்கள் ஒவ்வொருவருக்கும் கொடுத்தார்.
15 மனிதரின் வழிகளை ஆண்டவர் எப்போதும் அறிவார்: அவரின் பார்வையிலிருந்து அவை மறைந்திருப்பதில்லை.
16 [இளமை தொட்டே அவர்களின் வழிகள் தீமையை நாடுகின்றன. தங்களின் கல்லான இதயத்தை உணர்ச்சியுள்ள இதயமாக மாற்ற அவர்களால் முடியாது.]
17 நாடுகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தலைவரை ஏற்படுத்தினார்: இஸ்ரயேல் நாடோ ஆண்டவரின் பங்காகும்.
18 [இஸ்ரயேல் அவருடைய தலைப்பேறு. அதை நற்பயிற்சியில் வளர்க்கிறார்: அதன்மீது தம் அன்பின் ஒளியை வீசுகிறார்: அதைக் கவனியாது விட்டுவிடுவதில்லை.]
19 மனிதரின் செயல்கள் அனைத்தும் கதிரவனின் ஒளிபோல் அவர் திருமுன் தெளிவாய்த் துலங்குகின்றன: அவருடைய கண்கள் எப்போதும் அவர்களுடைய வழிகள் மீது இருக்கும்.
20 அவர்களுடைய அநீதியான செயல்கள் அவருக்கு மறைவாய் இருப்பதில்லை: அவர்களின் பாவங்கள் அனைத்தையும் ஆண்டவர் அறிவார்.
21 [ஆண்டவர் நல்லவர்: அவர் தம் படைப்புகளை அறிவார். அவற்றை அவர் விட்டுவிடவில்லை, கைவிடவுமில்லை: மாறாகப் பாதுகாத்தார்.]
22 மனிதர் செய்யும் தருமங்கள் அவருக்குக் கணையாழிபோல் திகழ்கின்றன: அவர்கள் புரியும் அன்புச் செயல்கள் அவருக்குக் கண்மணிபோல் விளங்குகின்றன.
23 பின்னர் அவர் எழுந்து அவர்களுக்குக் கைம்மாறு செய்வார்: அவர்களுக்குச் சேரவேண்டிய வெகுமதியை அவர்களின் தலைமேல் பொழிவார்.
24 இருப்பினும் மனம் வருந்துவோரைத் தம்பால் ஈர்த்துக்கொள்கிறார்: நம்பிக்கை இழந்தோரை ஊக்குவிக்கிறார்.
25 ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்: பாவங்களை விட்டு விலகுங்கள்: அவர் திருமுன் வேண்டுங்கள்: குற்றங்களைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
26 உன்னத இறைவனிடம் திரும்பி வாருங்கள்: அநீதியை விட்டு விலகிச் செல்லுங்கள்: அவர் அருவருப்பதை அடியோடு வெறுத்திடுங்கள்.
27 வாழ்வோர் உன்னத இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றனர்: ஆனால் கீழுலகில் அவரது புகழை யாரே பாடுவர்?
28 உயிர் வாழ்ந்திராதவர் போன்றே இறந்தவர்களும் அவருக்கு நன்றி செலுத்துவதில்லை: உடல் நலத்துடன் உயிர் வாழ்வோரோ அவரைப் போற்றுகின்றனர்.
29 ஆண்டவரின் இரக்கம் எத்துணைப் பெரிது! அவரிடம் மனந்திரும்புவோருக்கு அவர் அளிக்கும் மன்னிப்பு எத்துணை மேலானது!
30 எல்லாமே மனிதரின் ஆற்றலுக்கு உட்பட்டதில்லை: மனிதர் இறவாமை பெற்றவர் அல்லர்.
31 கதிரவனைவிட ஒளி மிக்கது எது? ஆயினும் சூரிய கிரகணமும் உண்டு. ஊனும் உதிரமும் கொண்ட மனிதர் தீமைகளைப் பற்றியே சிந்திக்கின்றனர்.
32 அவர் உயர் வானத்தின் படைகளை வகைப்படுத்துகிறார். மனிதர் அனைவரும் புழுதியும் சாம்பலுமே.